சென்னை: பறவை மோதியதை அடுத்து, சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட ஏர் ஏஷியா விமானம் உடனடியாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 24) நிகழ்ந்தபோது அந்த விமானத்தில் 190 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் மீது ஒரு பறவை மோதியது.
இதையடுத்து, தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்த விமானி, அனுமதியின் பேரில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.
அதன் பின்னர் விமான நிலைய ஆணைய பொறியாளர் குழு விமானத்தில் முழுமையாக சோதனை மேற்கொண்டனர். அப்போது விமான இன்ஜின் பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
எனினும், உடனடியாக அதைச் சரிசெய்ய வாய்ப்பு இல்லை என்பதால் பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு தங்குவிடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது.

