விமானப் பயணிகள் வருகை: சென்னை முதலிடம்; கோவைக்கு இரண்டாமிடம்

விமானப் பயணிகள் வருகை: சென்னை முதலிடம்; கோவைக்கு இரண்டாமிடம்

படம்: தமிழ் முரசு

03 May 2026 - 7:38 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில் வழக்கம்போல சென்னை விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மட்டும் ஏறக்குறைய 2.30 கோடி பயணிகள் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.7 விழுக்காடு அதிகம்.

சென்னையைத் தொடர்ந்து, 32.2 லட்சம் பயணிகளுடன் கோவை விமான நிலையம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கோவையில் பயணிகள் வருகை 5.2 விழுக்காடு அதிகரித்துள்ளதுடன், கடந்த ஓராண்டில் மட்டும் 22,462 முறை விமானங்கள் வந்து சென்றுள்ளன.

கிட்டத்தட்ட 31.2 லட்சம் பேர் உள்நாட்டுப் பயணத்திற்காகவும் 2.97 லட்சம் பேர் அனைத்துலகப் பயணத்திற்காகவும் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 22.2 லட்சம் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் மூன்றாம் இடத்தையும் 13.8 லட்சம் பயணிகளுடன் மதுரை விமான நிலையம் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தை 2.90 லட்சம் பேரும் சேலம் விமான நிலையத்தை 1.27 லட்சம் பேரும் கடந்த நிதியாண்டில் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விமானப் போக்குவரத்து கணிசமாக உயர்ந்து வருவது, மாநிலத்தின் பொருளியல், சுற்றுலா வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்