விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு செய்ய பயணிகள் வேண்டுகோள்

விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு செய்ய பயணிகள் வேண்டுகோள்

2 mins read
7c9f06ae-a360-4f4b-bc18-3cd84f67536f
விமான இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு வில்லையிலும் தமிழ் இல்லை.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யுமாறு விமானப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்நாட்டு விமானங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மாதாந்திர அடிப்படையில் சராசரியாக 5.76 விழுக்காடு அதிகரித்து வருகிறது.

விமானப் பயணிகள் வருகைப் பதிவில் மற்ற விமான நிலையங்களைக் காட்டிலும் சென்னை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

2024 ஆகஸ்ட் மாதம் மட்டும் 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் அனைத்துலக விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. திருச்சி விமான நிலையத்திற்கு ஜனவரி 11ஆம் தேதி மட்டும் 7,000க்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர்.

இந்நிலையில், தமிழகத்திற்குள் சேவையாற்றும் விமானங்களில் தமிழ்மொழியில் அறிவிப்பு செய்யுமாறு விமானப் பயணிகள் வலியுறுத்துவதாக தமிழ்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்தப் பயணிகளில் ஒருவர் சென்னையில் இருந்து திருச்சி சென்ற அனுபவத்தை அந்த ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.

“திருச்சியில் உள்ள எனது மகனைப் பார்க்க ஜனவரி 26ஆம் தேதி இரவு 8.40 மணி விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றேன்.

“பயணத்தின்போது விமானத்திற்குள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்தும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் உட்பட அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் அறிவிப்பு செய்தார்கள்.

“ஆனால் அந்த அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு வில்லையிலும் தமிழ் இல்லை.

“தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதால் அறிவிப்புகள் எதுவும் எனக்குப் புரியவில்லை.

“விமானத்தில் மட்டுமல்ல, விமான நிலையத்திலும் இதே நிலைமைதான் உள்ளது.

இந்தி, ஆங்கிலத்தில் செய்த அறிவிப்பை குறை சொல்லவில்லை. தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு இருந்தால் என்னைப் போன்ற பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் அந்தப் பயணி.

குறிப்புச் சொற்கள்