சென்னை: அடுத்த பத்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் புதிது புதிதாக ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இரு கட்சிகளின் தலைமையும் கட்சி நிர்வாகிகளுடன் ஒரே சமயத்தில் ஆலோசனை நடத்தின.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துபோனது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அவரது இந்த முடிவு கட்சியில் சில சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டாலும், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் பழனிசாமி.
இதற்காக, ஜூன் 14ஆம் தேதியன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜக உடனான கூட்டணி குறித்து மதிமுகவினர் யாரும் விமர்சிக்கக் கூடாது என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
திமுக கூட்டணிக் கட்சிகள் இம்முறை, வழக்கத்தைவிட தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் கோரியுள்ளன.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விசிக உள்ளிட்ட கட்சிகள் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் திமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக மண்டலப் பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஜூன் 14ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடு குறித்தும் இம்முறை யாரையெல்லாம் வேட்பாளர்களாக களமிறக்கலாம் என்பது குறித்தும் அவர் பொறுப்பாளர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
“ஒருவேளை அதிமுக தலைவர்கள் யாரேனும் பாஜகவுடனான கூட்டணி குறித்து விமர்சித்தாலோ, அல்லது கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையை திமுக தலைமை ஏற்காவிட்டாலோ, இந்தக் கூட்டணிகள் முறியும் வாய்ப்புகள் அதிகம்,” என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.