திமுக ஆட்சியில் ரூ.700 கோடி கல்குவாரி ஊழல் என அறப்போர் இயக்கம் புகார்

திமுக ஆட்சியில் ரூ.700 கோடி கல்குவாரி ஊழல் என அறப்போர் இயக்கம் புகார்

2 mins read
8bbee7c4-164e-426f-9a92-1bba8460e402
நடப்பு தவெக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால் ரூ.20,000 கோடி அளவுக்கு அரசுக்கு ஏற்பட இருக்கும் வருமான இழப்பு தடுக்கப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.700 கோடி அளவுக்குக் கல்குவாரிகளில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், தமிழகக் கனிம வளத்துறை அமைச்சர் பிரபுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நடப்பு தவெக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால் ரூ.20,000 கோடி அளவுக்கு அரசுக்கு ஏற்பட இருக்கும் வருமான இழப்பு தடுக்கப்படும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையிலும் அரசாங்கத்திலும் 2024ம் ஆண்டு கொடுத்த திமுக அரசின் ரூ. 700 கோடி கல்குவாரி ஊழல் தொடர்பான புகார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமவள இழப்பை மீட்கும் அபராத நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் திரு வெங்கடேசன் தமது மனுவில் கோரியுள்ளார்.

கல்குவாரி முறைகேடு தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் கனிம வளத்துறை அமைச்சர் பிரபு மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின்போது சில கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் ஒவ்வொரு கல் குவாரி அனுமதி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

“கடந்த ஆட்சியில் 2026ம் ஆண்டு ஜனவரியில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட அரசாணையை புதிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இதன்மூலம் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு ஏற்பட இருக்கும் வருமான இழப்பு தடுக்கப்படும்.

“புதிய ஆட்சியில் தமிழகத்தில் விதிமீறும் கல் குவாரிகள் அனைத்தும் சட்டப்படி மூடப்பட்டு, இழந்த பணத்தை மீட்டெடுத்து, அரசின் வருமானத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய குவாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அறப்போர் இயக்கத்தின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்