சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது தவெக தலைவர் விஜய் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான நிர்மல்குமார், 35 ஃபேஸ்புக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஆகியோருக்கு எதிராக கருத்துப் பதிவிட்டிருந்தார். அது சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) வழக்குப்பதிவு செய்து நிர்மல்குமாரைக் கைதுசெய்தனர். அவர் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாகக் கூறி அக்கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவேண்டும் என தவெகவினர் குரல் எழுப்பினர். காவல்துறையைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட தவெகவினரைக் காவல்துறையினர் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நிர்மல்குமாருக்கு இம்மாதம் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.