தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகள் கேட்கும் பாஜக

2 mins read
e7e384ea-53e7-4a37-a5b4-eb58bbd07167
பாஜகவுக்கு ஒதுக்கியதுபோக, மீதமுள்ள 174 இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அதிமுக, பாஜக இடையே தேர்தல் கூட்டணி உறுதியாகிவிட்டாலும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

மேலும், யார் தலைமையில் ஆட்சி, யாருக்கு முதல்வர் பதவி என்பதில் சில குழப்பங்களும் நீடிக்கின்றன.

இந்நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அதிமுக தலைமையிடம் பாஜக வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் 40 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் பாஜகவின் தோழமைக் கட்சிகளுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு ஒதுக்கியதுபோக, மீதமுள்ள 174 இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 இடங்களில் பாஜக போட்டியிட வேண்டும் என முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியதாக வெளியான தகவலை அவரே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பெறுவதில் அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் முனைப்பாக உள்ளனர்.

இதற்கிடையே, தேமுதிக தலைமை இன்னும் எந்தக் கூட்டணியில் இணையும் என்பதை தெளிவுபடுத்தவில்லை. எனினும், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளில், எங்கு தேமுதிகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அங்குதான் அக்கட்சி செல்லும் எனக் கூறப்படுகிறது.

“எனினும், பாஜக, தேமுதிகவின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பது சந்தேகம்தான். பாஜகவுக்கு வேண்டுமானால் சில தொகுதிகளைக் குறைத்து ஒதுக்க அதிமுக தலைமை முன்வரக்கூடும். இன்றைய தேதியில் தேமுதிக பலவீனப்பட்டிருப்பதால் அக்கட்சிக்கு எந்தக் கூட்டணியிலும் 40 இடங்களை ஒதுக்க வாய்ப்பில்லை,” என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.

குறிப்புச் சொற்கள்