தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்க பாஜக முயற்சி: ஸ்டாலின்

1 mins read
125eb000-eede-4518-a980-a6afd321f9ff
ஜூன் 18ஆம் தேதி மதுரை அருகே உள்ள விரகனூரில் திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றதை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். - படம்: ஊடகம்

சென்னை: பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையை பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் அறிக்கை ஒன்றில் குற்றஞ்சாட்டி உள்ளார்.

“தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை பாஜக அரசு திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான், திமுக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு,” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜூன் 18ஆம் தேதி மதுரை அருகே உள்ள விரகனூரில் திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை ஒருங்கிணைத்து, ‘கீழடி தமிழர் தாய்மடி’ என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, பாராட்டி மகிழ்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்