ஸ்டாலின்: அதிமுகவை மிரட்டி சதித்திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது பாஜக

ஸ்டாலின்: அதிமுகவை மிரட்டி சதித்திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது பாஜக

2 mins read
8281221b-54a6-4dc5-8390-f965fcad1822
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம் ஊடகம்

சென்னை: அதிமுகவின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்துத் தன்னுடைய சதித் திட்டங்களைப் பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொறுப்பாளர்களுடைய உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பாஜக தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்துக் கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்,” என்று கூறியுள்ளார்.

“தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்கத் தொகுதி மறுவரையறையெனத் திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக தலைமை. இதெல்லாம் அறிந்த தமிழக மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பார்கள்.

“மாநில உரிமை, மொழியுரிமை, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் கட்டிக்காக்க களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிருக்கும் பாஜக - அதிமுக கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது,” என்று கூறியுள்ளார்.

மேலும், ஓர் உள்துறை அமைச்சர், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு’ என்று வாய்க்கு வந்தபடி பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார்,” என்று சாடியுள்ளார்.

“பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்