சென்னை: ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன என்று தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், பிரிட்டனில் இதுவரை ஏழு நிறுவனங்களுடன் ரூ.8,496 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகக் கூறினார்.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமம், தமிழ்நாட்டில் மின்சார வாகனச் சந்தையில், பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமைக்க ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 1,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாகவுள்ளது.
ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கம், முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் ரூ.15,516 கோடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது.இதன்மூலம் 17,613 வேலைகள் உருவாகும் என்றார் அவர்.
லண்டனில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடனான தொடர்ச்சியான உயர் மட்ட கூட்டங்களுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். தற்காப்பு, விண்வெளி, கப்பல் கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கெனவே ரூ. 7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜெர்மனி நிறுவனங்களுடன் கையொப்பமாகியிருப்பதையும் அவர் சுட்டினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில், தமிழகம் முன்னேறி செல்கிறது, முதலீடுகள் பொழிகின்றன என்று ஸ்டாலின் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.