பள்ளிகளில் அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை

1 mins read
dc4e5c3b-72a1-4d57-bf0c-24e1007c87b3
அனுமதி பெறாமல் முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: பள்ளிகளில் அனுமதியின்றி முகாம்கள் நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாமின் போது எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளித் தாளாளா், முதல்வா் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாம் எதுவும் நடத்தப்படவில்லை என தமிழ்நாடு - புதுச்சேரி வட்ட என்சிசி இயக்குநரகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர், “மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு முகாமும் நடத்தக் கூடாது. முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் முகாம்கள் நடத்த அனுமதியில்லை. தனியார் பள்ளிகளில் எவ்வித முகாம்கள் நடத்தினாலும் பெற்றோர்களின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்