சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்: மலேசியர் கைது

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்: மலேசியர் கைது

1 mins read
b05a773c-419d-4680-8527-74e8fb44dd9b
உயர்ரக கஞ்சா கடத்திவந்த 62 வயதான மலேசியர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். - சித்திரிப்புப் படம்: என்எஸ்டி.காம்
Google News Preferred Icon

சென்னை: உயர்ரக கஞ்சா போதைப்பொருளைக் கடத்திவந்த மலேசியர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.

அவரிடம் இருந்து 3.45 கிலோ எடையுள்ள ‘ஹைட்ரோஃபோனிக்’ எனப்படும் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு 3.5 கோடி ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

62 வயதான அந்த மலேசியப் பயணி, தாம் சுங்கத்துறைச் சோதனைக்கு உட்படுத்தப்படும் எந்தப் பொருளையும் கொண்டுவரவில்லை என்பதை அதிகாரிகளுக்கு உணர்த்தும் விதமாக பச்சை வழிப்பாதை (கிரீன் சேனல்) வழியே விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.

வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது உடைமைகளைச் சோதித்தபோது, பயணப்பெட்டியின் அடியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய அறையில் நான்கு காற்று புகாத நெகிழிப் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருள் கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்ததில், அது வீரியமிக்க ‘ஹைட்ரோஃபோனிக்’ கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ‘போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்’கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், போதைப் பொருளைப் பறிமுதல் செய்து அம்முதியவரைக் கைது செய்தனர்.

மலேசியப் பயணிக்கு அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்
கஞ்சாமலேசியர்சென்னை விமான நிலையம்போதைப்பொருள்பறிமுதல்