ரூ.50,000க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

எம்பி, எம்எல்ஏ மேம்பாட்டு நிதியை விடுவிக்க தடை

ரூ.50,000க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை

2 mins read
f2de2214-f8bb-4835-bd7b-1a409b7c5c7e
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் ஞாயிறு இரவு நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றிக் கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீயிடம் தொகை ஒப்படைக்கப்பட்டு, அது சார்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் எம்.பி., எம்எல்ஏ தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவும் பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத் தேர்தலில் சட்டவிரோத பண விநியோகத்தைத் தடுத்துக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடவும் மத்திய வருமான வரித்துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, அஞ்சல்துறை, விமானத்துறை, கடலோரக் காவல்படை உள்ளிட்ட மத்திய அமைப்புகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பணம் அல்லது பொருள்கள் மூலம் வாக்காளர்களைக் கவரும் பணிகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் கடும் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது.

இதற்காக, பறக்கும் படையினரும் கண்காணிப்புக் குழுவினரும் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) முதலே தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் போன்றவற்றைக் கொண்டுசெல்லும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் ரொக்கம் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

அதற்குமேல் பணம் எடுத்துச் செல்லும்போது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற உரிய ஆவணங்களும் பணம் கொண்டு செல்லும் இடம், முகவரி போன்ற விவரங்களும் தெளிவாக இருக்க வேண்டும். அவை இல்லாதபட்சத்தில் அந்தத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை பணம் இருந்தால், மாவட்ட அளவிலான குழு ஆவணங்களைச் சரிபார்த்து பின்னர் விடுவிக்கும். ரூ.10 லட்சத்தைவிட அதிகமாக இருந்தால் அந்த விவரம் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்