சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறி, தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைத் திறந்துவிட மறுப்பதாகக் குறிப்பிட்டு, கர்நாடக அரசுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
நடப்பாண்டில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரில் பெரிதும் பற்றாக்குறை நிலவுவதைக் காவிரி ஒழுங்காற்றுக் குழு சுட்டிக்காட்டியது. இதன்பேரில், கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு நாள்தோறும் 3,000 கனஅடி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை கர்நாடகா முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில் அக்டோபர் 24 முதல் 27 வரையிலான முதல் நான்கு நாள்களில் மொத்தம் 12,000 கனஅடி நீர் வந்திருக்க வேண்டும். ஆனால், 8,149 கனஅடி நீர் மட்டுமே வந்துள்ளது. இதனால் 3,851 கனஅடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் வாதம் நிராகரிப்பு
கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் சேர்த்து 52 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு, பெங்களூரின் குடிநீர்த் தேவைக்கான காரணியை கர்நாடகா தேவையின்றிப் பெரிதுபடுத்துவதாகக் கூறியுள்ளது.
பெங்களூரின் அடுத்த ஏழு மாதக் குடிநீர்த் தேவையை நிறைவுசெய்ய 14 டிஎம்சி நீரே போதுமானது என்றும் அது சுட்டிக்காட்டி உள்ளது.
சம்பா சாகுபடி கவலை
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக ஜூலை மத்தியில் தொடங்கும் சம்பா சாகுபடி, இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில்தான் தாமதமாகத் தொடங்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், ஜனவரி வரை பயிர்களைப் பாதுகாக்கத் தினசரி நீர்வரத்து அவசியமானது.
எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மீறும் கர்நாடகாவின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் நிலுவையில் உள்ள பற்றாக்குறை நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
