காவிரி பங்கீட்டு நீர்: நடவடிக்கை எடுக்க கோரும் தமிழக அரசு

1 mins read
88ffcfbe-e03d-45c7-9c38-67cd1fd768ce
கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்வரத்து, இருப்பு ஆகியவை சீராக இருந்து வருவதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நவம்பர் மாதப் பங்கீட்டு நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடும்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு கோரியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நதிநீரை மாதாந்தர அட்டவணைப்படித் திறந்துவிடுகிறது கர்நாடகா. அந்த வகையில், நவம்பர் மாத 13.78 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் திறந்துவிடவில்லை.

இதையடுத்து, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு தனது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது.

வழக்கமான நடைமுறையின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 45வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் காணொளி வசதி மூலம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, மேட்டூர் அணையின் நீர் இருப்பு, அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்த தகவல்களை தமிழக அரசு முன்வைத்தது.

மேலும், கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர்வரத்து, இருப்பு ஆகியவை சீராக இருந்து வருவதாகவும் தமிழக அரசு சுட்டிக்காட்டியது.

எனவே இந்த விவரங்களின் அடிப்படையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கான நவம்பர் மாத பங்கீட்டு நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்