மழை பாதிப்பை எதிர்கொள்ளத் தயார்நிலை: தமிழக அரசு

தமிழகத்தில் அடுத்த ஆறு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

2 mins read
692ccc21-4183-4488-8760-c0baf1eb5502
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

இந்நியில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளையும் அதற்கு மறுநாளும் (டிசம்பர் 14, 15) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு நாள்களுக்கு தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக அது குறிப்பிட்டது.

வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, தென் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (டிசம்பர் 12) நெல்லை, தென்காசி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்ததால் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) மழைப்பாதிப்பு குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

“மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார். மழை பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை.

“மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன, மிக கனமழை பெற வாய்ப்பு உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்

“ஏரிகளில் நீர் திறப்புக்கு முன்னர், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்