சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதையடுத்து, தமிழகத்தில் தேர்தலையொட்டிய கூட்டணிக் கணக்குகள் மாற வாய்ப்பு உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்கு இடம் ஒதுக்க அதிமுக தலைமை முன்வராததால் அதிருப்தியில் உள்ளது.
எனினும், பின்னர் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்ததை அடுத்து, பிரேமலதா சமாதானம் அடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவ்வப்போது திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி கருத்து தெரிவித்துவந்தார் பிரேமலதா.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலின், அண்மையில் வீடு திரும்பியதை அடுத்து, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் பிரேமலதா.
அவருடன் தேமுதிக முக்கியமான நிர்வாகிகள் சென்றிருந்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
அண்மையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் முதல்வரை நேரில் சந்தித்து நலம்விசாரித்தார். அதன் பின்னர் அவர் தவெக தலைவர் விஜய் குறித்து மீண்டும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், தேமுதிக செயல்பாட்டிலும் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.