சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொடுங்கையூர், பெருங்குடி, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த பழைய கழிவுகளை அகற்றி, இதுவரை ஏறக்குறைய 118 ஏக்கர் நிலப்பரப்பை மாநகராட்சி நிர்வாகம் வெற்றிகரமாக மீட்டுள்ளது.
‘பயோமைனிங்’ (Bio-mining) முறையைப் பயன்படுத்தி, இந்த நிலப்பரப்பு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேங்கியுள்ள குப்பைகளை அகழ்ந்தெடுத்து, காற்று, சூரிய ஒளி அல்லது நுண்ணுயிரிகள் மூலம் மக்கச்செய்து, நெகிழி, இரும்பு, கண்ணாடி, மக்கும் குப்பைகளாகத் தரம்பிரித்து மறுசுழற்சி செய்வதை ‘பயோமைனிங்’ என்கின்றனர்.
நகரமயமாக்கலால் சென்னை மாநகரில் நாளுக்கு நாள் குப்பைகளின் அளவு அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அரசு நிலங்களை மீட்டெடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
350 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் உள்ள 66.52 லட்சம் டன் பழைய கழிவுகளில், இதுவரை 47.85 லட்சம் டன் (72%) கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 22 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. வரும் மே மாதத்திற்குள் இத்திட்டம் நிறைவடையும்போது, இங்கு மொத்தமாக 200 ஏக்கர் நிலம் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெருங்குடியில், முதற்கட்டமாக 29.28 லட்சம் கன மீட்டர் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டப் பணிகளில் இதுவரை 20 விழுக்காடு கழிவுகள் அகற்றப்பட்டு, விரைவில் 75 ஏக்கர் நிலம் மீட்கப்பட உள்ளது.
5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அத்திப்பட்டில் இரண்டாம் கட்டப் பணிகள் மூலம் அனைத்துக் கழிவுகளும் அகற்றப்பட்டு முழுமையாக நிலம் மீட்கப்படும் நிலையில் உள்ளது.
கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ள லட்சக்கணக்கான டன் கழிவுகளையும் ‘பயோமைனிங்’ முறையில் அகற்றுவதற்காக ரூ.275 கோடிக்கும் அதிகமான மதிப்பில் புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு வருகின்றன.
