சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒரு மாத காலம் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டினார்.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்கத் திட்டமிட்டார்.
அதன்படி சனிக்கிழமை (ஏப்ரல் 25) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்று, அங்கிருந்து சாலை வழியாக கொடைக்கானல் சென்றார்.
அங்கு அவர் தமது குடும்பத்தினருடன் ஒருவார காலம் தங்கி ஓய்வு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வெளிநாடு செல்ல சென்னை அனைத்துலக விமான நிலையம் சென்றார்.
அவர் துபாய் சென்றதாகக் கூறப்பட்டாலும் அதுபற்றி அதிகாரபூர்வத் தகவல் இல்லை.
முதல்வரும் துணை முதல்வரும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதிக்குள் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

