தென்காசி: தமிழகத்தில் சட்ட, ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல்வரும் அவரது மகனும்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஆனந்தன் ஐயாசாமியை ஆதரித்து சிந்தாமணி பேருந்து நிலையப் பகுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, தென்காசி சிந்தாமணி பகுதியில் இருந்து காமராஜர் சிலை வரை நடத்தப்பட்ட வாகனப் பேரணியில் அவர் கலந்துகொண்டார்.
வாசுதேவநல்லூரில் பிரசாரத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கள்ளக்குறிச்சியில் திமுகவின் அலட்சியத்தால்தான் மக்கள் பலியாகினர்,” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு பறித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றும் வழக்கத்தை அனுமதிக்க நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டபோதிலும், கார்த்திகைத் தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களை தமிழகக் காவல்துறை தடுத்து நிறுத்தி, கைது செய்தது.
“இங்கே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்ததும், கார்த்திகைத் தீபம் ஏற்றப்படும். இது உங்கள் உரிமை. இதுவே பாஜகவின் உத்தரவாதமும்கூட. திமுகவினர் கொள்ளையடித்த ஊழல் பணத்தை மீட்டெடுப்போம்.
“திமுகவும் காங்கிரசும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைத் தடுத்து விட்டன. மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்,” என்று ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.

