சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை தொடங்கியதுமே பல முன்னணித் தலைவர்கள் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்காவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அந்தத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலகம் ‘செம்பியம் பேப்பர் மில்ஸ்’ சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்துக்கு திங்கட்கிழமை காலை நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அதிகாரியான எஸ்.சாந்தியிடம் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளதால், அவர் வேட்பு மனுத் தாக்கலின் முதல் நாளே தமது மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல, சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை விஜய் திங்கட்கிழமை (மார்ச் 30) தாக்கல் செய்தார்
வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கீதாவிடம் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கலின் முதல் நாளிலேயே முதல்வர் ஸ்டாலினும் முதல்வர் பதவிக்குக் குறிவைத்திருக்கும் நடிகர் விஜய்யும் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் புறப்பட்டார்.
ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்த விஜய், “தமிழகம் இந்த நிலைக்குச் செல்வதற்கு தீயசக்தி திமுகதான் காரணம். திமுக ஆட்சி விரைவில் விடைப்பெறபோகிறது,” என்று பேசினார்.
சீமான் வேட்பு மனு தாக்கல்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் காரைக்குடி தொகுதியில் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் கடைசி நாளாகும். அன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு தாக்கலுக்கு எட்டு நாள்கள் அவகாசம் இருந்தாலும் அவற்றில் நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

