தேர்தல் களத்தில் குதித்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்

தேர்தல் களத்தில் குதித்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்

2 mins read
7e077ffd-912f-4fce-9c51-01c00cb838e3
வீதி வீதியாகச் சென்று வியாபாரிகளையும் பொதுமக்களையும் நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்த துர்கா ஸ்டாலின். - படம்: தட்ஸ்தமிழ்

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் பிரசார முகமாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் முதன்முறையாக மாநிலம் தழுவிய அளவில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வழக்கத்தை மாற்றிய துர்கா ஸ்டாலின்

கடந்த 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே துர்கா ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பது வழக்கமாக இருந்தது.

ஆனால், இந்த 2026 தேர்தலில் முக்கிய மாற்றமாக, கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்காகவும் அவர் வீதி வீதியாகச் சென்று நேரடியாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் சீர்காழி தொகுதியில் புயல் வேகப் பிரசாரத்தை முன்னெடுத்த அவர், பழையார், மடவாமேடு, திருமுல்லைவாசல் போன்ற மீனவக் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.

மீனவப் பெண்கள் பலரும் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், “தேர்தலுக்குப் பிறகு கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்,” என உறுதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து மப்பேடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்தார்.

வீதி வீதியாகச் சென்று வியாபாரிகளையும் பொதுமக்களையும் துர்கா ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

செல்லும் இடமெல்லாம் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எளிமையான அணுகுமுறை மூலம் பெண் வாக்காளர்களைப் பெருமளவில் அவர் கவர்ந்து வருகிறார்.

நான்காவது முக்கிய முகம்

திமுகவில் ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பிரதான பிரசார பீரங்கிகளாகச் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது நான்காவது முக்கிய முகமாக துர்கா ஸ்டாலின் களமிறங்கியுள்ளார்.

அரசியல் ரீதியாக இதுவரை திரைக்குப் பின்னால் மட்டுமே இருந்துவந்த அவர், தற்போது நேரடியாகக் களத்தில் இறங்கியிருப்பது திமுக தொண்டர்களிடையே இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பெண் வாக்காளர்கள் இடையே இவருக்கு இருக்கும் செல்வாக்கு, கூடுதல் வாக்குகளை ஈர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்