கரூர்: தமிழகத்தின் கரூரில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் 39 பேரைக் காவுகொண்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
இந்நிலையில், குழந்தைகள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடியதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
குழந்தைகளில் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கம் அடைந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோரும் உடன் வந்தவர்களும் செய்வதறியாது கண்ணீர்விட்டுக் கதறினர்.
அப்போது காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று குழந்தைகளை மீட்டு, தங்கள் கைகளில் ஏந்தியபடி ஆம்புலன்ஸ், இதர வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில், தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் அக்காட்சிகள் வெளியாகி, பார்ப்போரைக் கலங்கடித்தன.
இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் “இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும்,” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் விஜய் எந்தநேரத்திலும் கைது செய்யப்படக்கூடும் என்று பரவும் தகவலால் கட்சித் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவல்துறையின் அறிவுறுத்தலையும் பிரசாரக் கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் தவெக கட்சியினர் சரிவரப் பின்பற்றவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, அலட்சியமாகச் செயல்பட்டதன் பேரில் அக்கட்சி நிர்வாகிகள் மீதும் கட்சித் தலைவர் விஜய் மீதும் வழக்குப் பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.