நெல்லை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் கள ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் சண்டையடித்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கிய அந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையா திடீரென எழுந்து, அதிமுகவில் கள ஆய்வும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளும் சரியில்லை. அதனால் அதிமுக கடந்த தேர்தலில் சரிவைச் சந்தித்தது. இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் தஞ்சை கணேசராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென ஒருவருக்கொருவர் மாறி மாறித் தாக்கிக்கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. உட்கட்சி மோதலால் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பலருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்திலும் உட்கட்சி மோதலால் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

