சென்னை: அதிமுவில் அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டதை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி. வேலுமணியும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.ஜே. விஜயபாஸ்கர், புதன்கிழமை (மே 27) சட்டமன்ற சபாநாயகரை நேரில் சந்தித்தார். அப்போது, பிளவுபட்டிருந்த அதிமுகவின் இரண்டு அணிகள் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்களை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், அதிமுக என்ற எஃகு கோட்டையை எவராலும் அசைக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இது தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கம். இனி நமக்குள் பிரிவில்லை. நம் இலக்கு ஒன்றுதான். அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே,” என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அவர்களைக் கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எனினும், எஸ்.பி. வேலுமணியுடன் இணைந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த ஐந்து எம்எல்ஏக்கள், பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனால் பழனிசாமி தரப்புக்கு ஆதரவு கூடியதை அடுத்து, எஸ்.பி. வேலுமணி தரப்பு அவருடன் மீண்டும் இணைந்து செயல்பட முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் இரண்டு அணிகளாகப் பிளவுபட்ட அதிமுக, மீண்டும் இணைந்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைந்துவிட்டோம் என்றார். எனினும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மட்டும் இன்னும் தனது முடிவைத் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக்க சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

