ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி

ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி

படம்: விகடன்

09 May 2026 - 10:47 pm

2 mins read

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சியமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் அரசியல் பரபரப்பான சூழலில் இருக்கும்போது, எடப்பாடியின் இந்தப் பதிவு, அவர் முதல்வர் பதவிக்காக இனிமேல் போட்டியிடப் போவதில்லை என்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தவெக ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலையில், அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிகள் நடந்துவருவதாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரி அழைத்து செல்லப்பட்டு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் இருந்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் சென்னைக்குத் திரும்பிவிட்டனர். அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டபின் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின் எடப்பாடி பழனிசாமி, இந்த வாழ்த்துப் பதிவை ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனால், அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரைக் குறிப்பிடாமல் வாழ்த்துக் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அதிமுக ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பின் வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்; எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தருவார் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, இது தொடர்பாக கட்சி பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், அதிமுக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கான தகுதியையே இழந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்போது அதிமுக தொண்டர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சியைக் கட்டிக்காக்க எடப்பாடி எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அதிமுவினரிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்