காங்கிரஸ் தலைமையின் போக்கு: ‘முரசொலி’யில் கடும் விமர்சனம்

காங்கிரஸ் தலைமையின் போக்கு: ‘முரசொலி’யில் கடும் விமர்சனம்

2 mins read
9139885f-7ef6-4755-a286-2d92594ebb94
பாஜகவை எதிர்கொள்வதைவிட, காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளைக் குறிவைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறதா என்று முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. - கோப்புப் படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியபடியே, அவற்றை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியை ராகுல் காந்தி பலவீனப்படுத்துவதாக திமுக குற்றஞ்சாட்டி உள்ளது.

ராகுல் காந்தி அரசியல் முதிர்ச்சியின்றிச் செயல்படுவதாக அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் தலையங்கப் பகுதியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் ஆதரவோடு, நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது.

குறிப்பாக, திமுகவிடம் கலந்தாலோசிக்காமலேயே தவெகவுக்கு ஆதரவு தர முன்வந்தது காங்கிரஸ். இதனால் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இண்டியா கூட்டணியின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தியது யார் என்று ‘முரசொலி’ கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அம்மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயனைக் கைது செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும், அங்கு ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு பாஜகவுடன் ரகசிய உடன்பாடு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதைச் சுட்டிக்காட்டியுள்ள ‘முரசொலி’, இத்தகைய தாக்குதல்கள், பாஜகவை எதிர்கொள்வதைவிட, காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளைக் குறிவைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல இந்திய அணி கூட்டணிக் கட்சிகள் காங்கிரசை விமர்சித்ததை அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியதோடு, ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை எதிர்க்கட்சிக் கூட்டணிக்குள் மீண்டும் மீண்டும் உராய்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு ராகுல் காந்தி அண்மையில் அளித்த உறுதிமொழிகளையும் அது கேலி செய்தது.

குறிப்புச் சொற்கள்