மதுரை: தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க) தலைவர் விஜய், ‘இண்டியா’ கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொன்னார்.
அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் (பா. ஜ. க) மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மதுரை நகரில் கூறினார் என்று தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“த.வெ.க. தலைவர் விஜய் ‘இண்டியா’ கூட்டணிக்கு வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் மீது 10 விழுக்காடாவது வைக்க வேண்டும். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ கூட்டணிக்காக விஜய்க்கு அழைப்பு விடுத்தார். அதே வேலையை செல்வப்பெருந்தகை செய்கிறார்,” என்று திரு அண்ணாமலை கூறினார்.
மேலும், “சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்குத் தொலைநோக்குப் பார்வை இருந்தது. அறிவாளி... அதிகாரிகளை வேலைவாங்கத் தெரிந்தவர். அவரைப் போன்ற தலைவர் தமிழகத்திற்குத் தேவை. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் மாற்றம் வரும். தே.ஜ. கூட்டணி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) ஆட்சியில் அமரும்,” என்றும் திரு அண்ணாமலை கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.