தவெக அரசைக் கவிழ்க்க சதி; புகாரின் பேரில் மூன்று பேர் கைது

தவெக அரசைக் கவிழ்க்க சதி; புகாரின் பேரில் மூன்று பேர் கைது

2 mins read
ee61ab92-5113-486f-bac5-90f2db2586a8
இளையராஜா. - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழகத்தில் ஆளும் தவெக தலைமையிலான கூட்டணி அரசைக் கவிழ்க்க சதி நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரைத் தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.

15 தவெக எம்எல்ஏக்களை ஒரே நேரத்தில் பதவி விலகச் செய்ய வைக்க பேரம் பேசப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக அரசைக் கலைக்க சில தரப்பினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அக்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால், அதிமுக எஎல்ஏக்களைத் தங்கள்வசம் இழுக்க தவெகதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அதிமுகவும் திமுகவும் சாடின.

இந்நிலையில், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆட்சிக்கவிழ்ப்புச் சதித்திட்டத்துடன் தொடர்புடைய ஒருவரைச் சென்னையில் கைது செய்துள்ளனர். மேலும் இருவர் கரூரில் கைதாகினர்.

அவர்கள் மூவருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புள்ளதாகக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் யூடியூபர் திருநாவுக்கரசு இதுகுறித்து எம்எல்ஏவிடம் பேசியதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

தனக்கு இத்திட்டத்தில் உடன்பாடில்லை என்று இளையராஜா மறுத்தபோது அவரை திருநாவுக்கரசு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கைது செய்யப்பட்ட மூவரையும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சந்தித்துப் பேசியதாக மாலை மலர் செய்தி தெரிவித்தது.

கைதான திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய மூவரும் அசோக்குமார் அறிவுறுத்தலின் பேரிலேயே இளையராஜா உள்ளிட்ட சில தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேச முற்பட்டதாகக் காவல்துறை கூறியது.

தவெக அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதி தொடர்பாகக் காவல்துறை உரிய சட்டநடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் வலியறுத்தியுள்ளார். இதுபோன்ற தீய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான, உறுதியான ஆதாரங்கள் இருந்தால் அவரைக் கைது செய்யுமாறு தவெக அரசுக்கு திமுக சவால் விடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை விவரங்களைக் கசிய விடுவதன்மூலம் மக்கள் மத்தியில் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க தவெக முயற்சி செய்கிறது என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்