மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 750க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் திங்கட்கிழமை (நவம்பர் 2) காலை முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தூய்மைப் பணிகள், நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணிகள் முற்றிலும் முடங்கி, மருத்துவமனைச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் 3,000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மருத்துவமனையின் தலைவர் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும், வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
“நாள்தோறும் ரூ.710 முழுமையாக வழங்கப்பட வேண்டும். ரூ.10,000 முன்பணமாக வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்,” எனப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
பணியாளர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சக்கர நாற்காலிகளைத் தள்ளுவது உள்ளிட்ட முக்கியப் பணிகள் முடங்கியதால் நோயாளிகளும் அவர்தம் உறவினர்களும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
