சென்னை: தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் 59 விழுக்காட்டினர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகி உள்ள அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக, ஆந்திர மாநிலத்தில் 79% எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
28 இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 4,123 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தபோது, மேற்குறிப்பிட்ட அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்ததாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஏறக்குறைய 45% பேர் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களில் 29% மீது (1,205 எம்எல்ஏக்கள்) கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
அதிகபட்சமாக, ஆந்திராவைச் சேர்ந்த 138 எம்எல்ஏக்கள் மீது இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் 69%, பீகாரில் 66%, மகாராஷ்டிராவில் 65%, தமிழகத்தில் 59% எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாஜகவின் மொத்த எம்எல்ஏக்கள் 1,653 பேரில் 638 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 436 பேர் (26%) கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் 646 எம்எல்ஏக்களில், 339 பேர் (52%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 194 பேர் (30%) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் திமுகவின் 74% (132 பேரில் 98 பேர்) எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 42 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு கூறியுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் 134 எம்எல்ஏக்களில், 115 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 82 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மேற்கு வங்கத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 230 எம்எல்ஏக்களில், 95 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 78 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.