சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்சப் புழக்கத்தைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக வந்த லஞ்சப் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் மயிலாப்பூர், அடையாறு மண்டலங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், புதுக்கோட்டை நகர் ஊரமைப்பு அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி அலுவலகம், திண்டுக்கல் மாநகராட்சி, பரமக்குடி நகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது.
ஈரோடு, பிற மாவட்டங்களில் உள்ள நகர் ஊரமைப்பு அலுவலகங்களுக்குச் சென்ற அதிகாரிகள், முக்கியக் கோப்புகளையும் ஆவணங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத லஞ்சப் பணம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகளை ஒரே இடத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பண்டிகைக் காலங்களில் அரசு அலுவலகங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சப் பணம் பரிமாறப்படுவதைத் தடுக்கவே இந்த ‘தீபாவளிச் சோதனை நடவடிக்கை’ மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கப் பணமும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதையடுத்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
