விமான நிலைய மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் தாமதம்

விமான நிலைய மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் தாமதம்

படம்: இந்து தமிழ் திசை

23 Oct 2026 - 7:36 pm

1 mins read

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்குவதைத் தடுக்க ரூ.22 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் முடங்கியுள்ளது.

சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, சென்னை விமான நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

விமான ஓடுதளத்தில் வெள்ளநீர் தேங்கியதால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

பல்லாவரத்தில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் பெருக்கெடுக்கும் மழை நீர், ஓடுதளத்தில் உள்ள வடிகாலில் செல்ல முடியாமல் தேங்குவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது.

இதற்குத் தீர்வு காண, விமான நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை வெட்டி, அதன் வழியாக மழைநீரை அடையாறு ஆற்றுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

இப்பணியைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விரிவான திட்ட மதிப்பீட்டைத் தயாரித்தனர்.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் திட்ட நிதியிலிருந்து தொகையை வழங்குவதற்காக ஆணையத்தின் உள்வட்டாரக் குழு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் தொழில்நுட்ப ரீதியாகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தும், நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகளைச் செயல்படுத்த முடியாமல் உள்ளது.

“இந்திய விமான நிலைய ஆணையம் நிதியை நீர்வளத் துறையின் வங்கிக் கணக்கில் செலுத்தினால், உடனடியாகப் பணிகளைத் தொடங்கிவிடுவோம்,” என்று நீர்வளத் துறையினர் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்