திசை மாறுகிறது தேர்தல் களம்

திசை மாறுகிறது தேர்தல் களம்

3 mins read
2993b440-e59c-4a9b-a5da-c865cf813843
தமிழக சட்டமன்றப் பொத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. - படம்: செயற்கை நுண்ணறிவு

வாக்குப்பதிவுக்கு ஒன்றிரண்டு நாள்களே உள்ள நிலையில் கள நிலவரம் எல்லாக் கட்சியின் வாக்குகளையும் சிதறடிக்கக்கூடியதாக மாற்றம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஜனநாயகச் சோதனை திரும்புவதுபோலத் தெரிகிறது. தேமுதிக அறிமுகம் கண்ட 2006 தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வென்றாலும் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்ததால் 61 தொகுதிகளில் மட்டுமே வென்று ஜெயலலிதா ஆட்சியை இழந்தார். 96 இடங்களில் வென்ற திமுக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு விஜயகாந்த் புயலின் சீற்றம் இருந்தது.

அதையும் மிஞ்சக்கூடிய விஜய் சுனாமி இந்தத் தேர்தலில் வீசுவதற்கான அறிகுறி இருப்பதாகவும் ஊடகத்தினர் கூறுகின்றனர். விஜயகாந்த் வந்தபோது இன்ஸ்டகிராம் போன்ற துடிப்புமிக்க சமூக ஊடகங்கள் இல்லை. அதனால், இளையர் மற்றும் பெண்களிடம் இப்போது இருக்கும் ஜனநாயக விழிப்புணர்வு அப்போது இல்லை.

அப்படியிருந்தும் தமிழக அரசியலில் அவரால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் அதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். இரு வாரங்களுக்கு முன்னர் வரை, ஒன்றிரண்டு தொகுதிகளில் தவெக வெல்லக்கூடும் என்று சொன்னவர்கள், இப்போது பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லக்கூடிய அளவுக்கு வெற்றிக் காற்று தவெக பக்கம் வீசுவதாகவும் ஒருசில நடுத்தர வயது மக்களும் முதியோரும்கூட ‘போதும், புதியவருக்கு வாய்ப்புக் கொடுப்போம்’ என்ற மனநிலையில் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

“சனிக்கிழமை (ஏப்ரல் 18) வரை 12 இடங்களில் மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்த விஜய், அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொள்கிறார். மற்ற கட்சிகளின் தலைவர்கள் வீதி வீதியாக, இரவு பகலாக பிரசாரம் செய்தாலும் விஜய் பிரசாரம் வித்தியாசமாக உள்ளது. அவர் ஓரிடத்தில் செய்யும் பிரசாரம் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளை ஈர்த்துவிடுவதால் ‘வெற்றி வந்து சேரும்’ என்ற நினைப்பில் விஜய் இருக்கிறார்,” என தவெக நிர்வாகி ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

பல தொகுதிகளில் விசில் சத்தம் ஓங்கி ஒலிப்பதாகவும் அதேநேரம், விஜய்யின் செல்வாக்கு மௌனமாகப் பரவுவதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறுகின்றனர். வேட்பாளரின் பெயரே தெரியாமல் மக்கள் வாக்களித்த சூரியன், இலை, பானை, முரசு, விவசாயி சின்னங்களின் வரிசையில் இப்போது விசில். விஜய் என்னும் தனி மனிதன் உருவாக்கிய மௌனப் புரட்சி தவெகவுக்குக் கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பது பெரும்பாலான ஊடகங்கள் கணிப்பு. அதிசயம் நிகழ்ந்து, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வென்று, பல்வேறு தொகுதிகளில் அதிக வாக்குகளுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தால், எல்லாக் கட்சிகளின் வாக்குகளும் சிதறும். வெற்றிபெற வேண்டியவர் தோற்பார். சில இடங்களில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி அமையும்.

ஒட்டுமொத்தத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை தலைமைக் கட்சி நாடும். கூட்டணியே தோற்றால், அதிக இடங்களை வென்ற கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். பெரும்பான்மையை நிரூபிக்கக் காலக்கெடு விதிக்கப்படும். அப்போதுதான் அரசியல் விளையாட்டு சூடுபிடிக்கும். தவெக, காங்கிரஸ், பாஜக, நாதக போன்ற கட்சிகள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருந்தால் அவற்றில் ஒன்று ‘கிங் மேக்கராக’ உருவெடுக்கும். சொந்தச் சின்னத்தில் வென்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும் - என்பது அரசியல்-பொருளியல் ஆய்வாளர் ஒருவரின் கருத்து. திராவிடக் கட்சிகள் ஆண்ட தமிழ்நாடு, தொங்கு சட்டமன்றத்தைக் கண்டதில்லை என்ற வரலாறு மாறுமா? அல்லது விஜய் பிரிக்கும் வாக்குகள் ஏதேனும் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துமா? காத்திருப்போம் மே 4 வரை. -திருநா

குறிப்புச் சொற்கள்