மத்திய-மாநில உறவுகள் உயர்மட்டக் குழு கலைப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மத்திய-மாநில உறவுகள் உயர்மட்டக் குழு கலைப்பு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

கோப்புப் படம்: விகடன்

07 Nov 2026 - 4:05 pm

1 mins read

சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான உயர்மட்டக் குழுவைக் கலைத்து, அதன் அதிகாரங்களை மறுசீரமைக்கப்பட்ட மாநிலச் சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்துத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“பாஜக தொடுக்கும் கூட்டாட்சி மீதான தாக்குதலுக்கு எதிரான பெருங்கருத்தாயுதத்தை நாம் இழக்கிறோம். இக்குழுவின் அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடியது,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கவலை தெரிவித்தார்.

இக்குழு கலைக்கப்பட்டது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியக் கூட்டாட்சிக்குமான பேரிழப்பு என்றார் சு.வெங்கடேசன். மேலும், இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய இக்குழுவின் பரிந்துரைகளைத் தாம் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவாதத்தின்போது மக்களவையில் சமர்ப்பித்து உரையாற்றியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் வலுப்படுத்தும் நோக்கில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் மு. நாகநாதன் ஆகியோர் அடங்கிய மூவர் குழு 2025 ஏப்ரலில் அமைக்கப்பட்டது. ஊதியம் பெறாமல் பணியாற்றிய இக்குழு, தனது முதல் பகுதி அறிக்கையை நடப்பாண்டு பிப்ரவரியில் சமர்ப்பித்திருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) வெளியிடப்பட்ட அரசாணையில், அக்குழு ஒரு சட்டபூர்வ அமைப்பல்ல எனச் சுட்டிக்காட்டி அதன் சேவைகளை உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலச் சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு, மத்திய-மாநில உறவுகள் குறித்த ஆய்வுகள், சட்ட மறுஆய்வு உள்ளிட்ட விரிவான அதிகாரங்கள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்