சென்னை: தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட, கடந்த இரண்டு நாள்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னை நகர சாலைகள் வாகன நெரிசலால் விழிபிதுங்கின.
ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி, தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல், அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் இருந்து நாள்தோறும் வழக்கமாக இயக்கப்படும் இரண்டாயிரம் பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து மூன்று நாள்களுக்கு மொத்தம் 11,200 பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 2,000 பயணிகள் அமர இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
வழக்கத்தைவிட கூடுதல் காவல்துறை கண்காணிப்பு, மூன்று மடங்கு அதிகமான தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 18 குடிநீர் வழங்கும் இயந்திரங்கள், 8 ஏடிஎம் எந்திரங்கள், சில டிராலிகள், 140 தங்குமிடங்கள் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்ததால் பயணிகள் சிக்கலின்றி பயணம் மேற்கொள்ள முடிந்ததாக போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்களையும் இணைக்கும் வகையில், 24 மணிநேரமும் சென்னையில் மாநகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அக்டோபர் 28ஆம் தேதி இயக்கப்பட்ட 2,461 பேருந்துகளில் 1.10 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டதாகவும் அக்டோபர் 30ஆம் தேதியன்று 2,125 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக சென்னை நகர சாலைகள் மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சென்னையில் சில பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக வாகனமோட்டிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டன. இதேபோல் ரயில் நிலையங்களிலும் பெரும் கூட்டம் கூடியது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணச்சீட்டு கிடைக்காதவர்கள் ரயில் நிலையங்களுக்கு விரைந்தனர். முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் இருமடங்கு பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
மேலும், முன்பதிவு செய்தவர்களின் இருக்கைகளை சிலர் ஆக்கிரமித்ததால் குழப்பம் நிலவியது.