புதுச்சேரி அரசைக் காக்க பாஜகவுடன் திமுக உறவு: அதிமுக கண்டனம்

2 mins read
3e8e6224-d653-4fd6-9e03-5463b3c9f190
அதிமுகவின் மாநிலச் செயலாளர் அன்பழகன். - படம்: ஊடகம்

புதுச்சேரி: சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் பிரச்சினையை திசை திருப்பும் வகையில், தமிழக திமுக அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அக்கட்சியின் செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை அண்ணா சிலை பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்தது.

அப்போது உரையாற்றிய அன்பழகன், “சட்டப்பேரவைத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அண்ணா பல்கலைக் கழக மாணவி பிரச்சினையைத் திசைதிருப்பும் வகையில், தமிழக ஆளுநரைப் பயன்படுத்தி ஒரு பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போதே கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு இன்று வரை பாஜகவுடன் எவ்வித உறவும் இன்றி அதிமுக செயல்பட்டு வருகிறது.

ஆனால் திமுகவோ, பாஜகவை விமர்சனம் செய்துகொண்டே மறுபுறம் டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரை பல்வேறு விழாக்களுக்கு இங்கு அழைத்து வந்து உள்ளுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வது திமுகவின் புதிய இரட்டை வேடம்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியில் பாஜகவைச் சேர்ந்த பேரவைத் தலைவர் மீது 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மனுக் கொடுத்துள்ளனர்.

அது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் திமுக ஆதரிக்கும் வரை பேரவைத் தலைவருக்கு பாதிப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவிப்பை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக அரசைக் காப்பாற்றுவதற்கு எங்களுக்குத் துணை நிற்பது திமுகதான் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கும் விதத்தில் திமுக - பாஜகவின் உறவு உள்ளது.

ஆனால், இதையெல்லாம் மூடி மறைத்து விட்டு அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாக மக்களை ஏமாற்றும் விதத்தில் திமுக பேசுவது கண்டிக்கத் தக்கதாகும் என்று அன்பழகன் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்