சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காகத் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், திமுகவைச் சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால், அப்பதவிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் ஜூன் 9ஆம் தேதி நிறைவடைந்தது.
திமுக சார்பில் வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் முன்மொழியப்பட்டார்.
அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். அவர்கள் அனைவரும் ஜூன் 6ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, ஏழு சுயட்சை வேட்பாளர்களுடைய வேட்பு மனுவில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு கடிதம் இல்லாததால் தேர்தல் அதிகாரி அவற்றை நிராகரித்தார்.
இதனைத் தொடர்ந்து வேட்பு மனு ஏற்கப்பட்ட அதிமுக, திமுக, மநீம வேட்பாளர்கள் போட்டியின்றி மாநிலங்களவைக்குச் செல்வது உறுதியாகியுள்ளது.
வேட்பு மனுவைத் திரும்ப பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அன்று மாலை 3 மணிக்கு மேல் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.