சென்னை: தமிழக முதல்வர் விஜய்க்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனைத் தனிப்படை காவல்துறையினர் புதன்கிழமை (அக்டோபர் 28) காலை கைது செய்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அண்மையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறை வாசலில் திரண்ட திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, வேலூர் மாநகராட்சியின் 12வது வார்டு திமுக கவுன்சிலரான டீட்டா சரவணன், முதல்வர் விஜய்க்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து, புழல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் அவர் தலைமறைவானார். அவரைத் தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், விழுப்புரத்தில் பதுங்கியிருந்த டீட்டா சரவணனைக் காவல்துறையினர் புதன்கிழமை காலை கைது செய்தனர்.
