சென்னை: தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு, வாழ்வாதாரத்துக்காக அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போராட்டத்தை ஆட்சி அதிகாரக் கண்கொண்டு பார்க்கக் கூடாது என்றும் இவ்விவகாரத்தை முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், புறமுதுகு காட்டுவது ஏன்? என்று அறிக்கை ஒன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு, ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது.
“சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்கவும் வாக்குறுதி அளித்தது,” என விஜய் தமது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.
தமிழக அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்ட காலமாகப் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், 1-4-2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டப்படி வழங்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.
“அரசு இயந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை என்றும் பழைய ஓய்வூதியத் திட்டமானது ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.