போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக கைது

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக கைது

2 mins read
9d1a0f2d-c62b-41bf-91e9-09788005aab4
மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். - படம்: தினமணி

சென்னை: தமிழகக் காவல்துறை அனுமதி மறுத்ததும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர் சரத்குமார், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காணொளி விவகாரம் தொடர்பில் அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் அமர்ந்து போராடிய சேகர் பாபு உள்ளிட்ட திமுகவினரைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர்.

சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் ஐபிஎல் போட்​டியைக் காணச் சென்​ற​போது திறன்பேசிமீது வெள்ளை நிறத்தூள் போன்ற பொருளை வைத்து ஏடிஎம் அட்டை மூலம் பொடி செய்வது போன்ற காட்சி காணொளியில் இடம்பெற்று இருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சரத்குமார் தனது மனைவியுடன் இணைந்து காணொளி ஒன்றை வெளியிட்டார்.

“இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பு எனது ஒன்​றரை வயது குழந்தை உடல்​நலம் சரி​யில்​லாமல் இருந்தது. முழு மாத்​திரையை விழுங்க முடி​யாத​தால் அதை தூளாக்கி கொடுத்​தேன்,” என்று அவர் அதில் விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

ஆனால் காவல்துறை திமுகவினரின் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழி, “தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது,” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதுபோல காணொளி வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு,” என்று எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணியின் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திமுகபோராட்டம்கைதுசேகர் பாபுமேயர்