சென்னை: அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய அமித்ஷாவைக் கண்டித்து நாட்டு மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தளத்தில், ‘எங்கே பழனிசாமி?’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அவரைப் பதவி விலகக் கோரியும் திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
ஆனால், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியோ, அண்ணல் அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்று வரும் சனாதன சக்திகளுக்குத் துணைபோகும் விதமாக வாய் மூடிக் கிடக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
மக்களாட்சியை அழிப்பதற்கு கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாகப் பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்கக் கூட வேண்டாம் வலிக்காமல் வலியுறுத்தக் கூட மனமின்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.
யார் கண்ணிலும் படாமல் பதுங்கு குழியில் பதுங்கிக் கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்குத் தெரியுமா? தெரியாதா? எனப் பதிவிட்டுள்ளார்.

