ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு திமுகதான் காரணம்: ஆதவ் அர்ஜுனா

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு திமுகதான் காரணம்: ஆதவ் அர்ஜுனா

2 mins read
3fff1ec8-74a9-4fd4-837e-6b50b655e105
திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது என்று சென்னையில் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். - படம்: தமிழ் இந்து
Google News Preferred Icon

சென்னை: திமுகவின் மிரட்டல்களால்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். அரசியலில் மாற்றம் ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பியவர். ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது,” என்றார்.

“அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார்.

“ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது. கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார்,” என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

“மாற்றம் உருவாக வேண்டும் என நினைத்த தலைவர்கள் தற்போது என்ன ஆனார்கள். மதிமுக தலைவர் வைகோ கட்சி ஆரம்பித்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவைச் சாடினார். ஆனால் தற்போது நான்கு சீட்டை பெற்று இருக்கிறார். அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். ஒரு தொகுதியில் மட்டும் அவர்கள் சின்னத்தில் போட்டியிடுவார்களாம்.

“2014ஆம் ஆண்டு திருமாவளவன் திமுகவை எதிர்த்து கடுமையாக பிரசாரம் செய்தார் . தற்போது அவராலும் முடியவில்லை. கமல்ஹாசன் உட்பட அனைவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் அவரும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்கச் சென்றுவிட்டார்.

“மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், தற்போது திமுகவில் இணைந்துவிட்டார். அப்படியென்றால் திமுகவின் பண பலத்தைப் பாருங்கள். எல்லாரையும் மிரட்டலாம், யாரையும் விலைகொடுத்து வாங்கலாம். ஆனால் தமிழகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்,” என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.

சென்னையில் ஒரே மேடையில் திரண்ட தவெக முக்கிய நிர்வாகிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்