சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (நவம்பர் 6) நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் 82 பேரில் 81 பேர் கலந்துகொண்டனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உள்கட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உட்கட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.
மேலும், “திமுகவையும் பாஜகவையும் அதிமுகவினர் விமர்சிக்கலாம். ஆனால், அந்தக் கட்சிகளின் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்,” என அவர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.