சென்னை: நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம்? என தமிழக வெற்றிக்கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் விடுத்துள்ள அறிக்கையில், மதநல்லிணக்கம் தொடர்பாக திமுக அரசின் சாயம் வெளுக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அறவழிப் போராட்டம் என்பது அரசியல் அடையாளங்களில் ஒன்று. அதுவும் மதநல்லிணக்கம் பேண வலியுறுத்தும் பேரணியை எந்தக் கட்சி அல்லது அமைப்பு நடத்தினாலும் அது கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று.
“மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மதநல்லிணக்கப் பேரணியை மதுரையில் நடத்த அக்கூட்டமைப்பினர் அனுமதி கேட்டும், ஆளும் திமுக அரசு அனுமதி மறுத்திருக்கிறது,” என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும்கூட மதுரையில் நடைபெற்ற மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் விரக்தியோடு பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பேரணி நடத்த அனுமதி மறுத்தது என்பது, மதநல்லிணக்கம் தொடர்பாக இரட்டை வேடம் போடும் திமுகவின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம் என்பது திமுக அரசுக்கே வெளிச்சம் என்றும், பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்கு மட்டும் அனைத்து அனுமதியும் அளிப்பது என்பது இந்த திமுக அரசு தன் மறைமுகக் கூட்டணியை உறுதி செய்வதைத்தானே காட்டுகிறது என்றும் ராஜ்மோகன் காட்டத்துடன் விமர்சித்துள்ளார்.
“திமுக அரசால், பாஜக மீதானத் தன்னுடைய மறைமுகப் பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. பூனைக்குட்டி வெளியே வரத்தான் செய்கிறது,” என்று ராஜ்மோகன் மேலும் தெரிவித்துள்ளார்.