திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் மரமேறிப் போராட்டம்

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் மரமேறிப் போராட்டம்

பிணை பெற்றும் ஈரானியப் பெண் அடைப்பு
படம்: ஐபிசி தமிழ்

05 Nov 2026 - 12:44 pm

2 mins read

திருச்சி: தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள வெளிநாட்டவர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அன்றாட உணவுக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து முகாம் வளாக மரங்களின் மீதேறி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடப்பு நவம்பர் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய உணவுக்கான கொடுப்பனவுகள் நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அடிப்படை வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முகாம்வாசிகள், உயரமான மரங்களின் மீதேறி இறங்க மறுத்துப் போராட்டத்தில் குதித்தனர். அதிகாரிகள் பலமுறை சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இறங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, பல ஆண்டுகளாக அங்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளியான 50 வயதுடைய கிருஷ்ணகுமார் கந்தசாமி என்பவர் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

அத்தொடர் நடவடிக்கைகளால் உயிருக்கு அச்சமடைந்திருந்த நிலையில், தற்போது உணவுக் கொடுப்பனவும் முடக்கப்பட்டதால் முகாம் வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குப் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை நாடிய ஈரானியப் பெண்

இதற்கிடையே, நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னரும் அதே முகாமில் அடைக்கப்பட்டுள்ள 30 வயதுடைய ஈரானியப் பெண் பெகா அன்சாரி, தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஈரானில் நிலவிய மதக் கெடுபிடிகளால் கிறித்துவ மதத்திற்கு மாறியதால், 2019ல் அங்கிருந்து தப்பித்து இலங்கை வழியாக 2022ல் சுற்றுலா விசாவில் இந்தியா வந்ததாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா அகதிகள் உயர் ஆணையம் (UNHCR) அவருக்கு 2025 மார்ச் மாதம் அகதி தகுதி வழங்கியபோதும், விசா, கடப்பிதழ் காலாவதியான வழக்கில் கன்னியாகுமரி காவல்துறையினரால் 2025 டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜனவரியில் மாவட்ட நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கிய நிலையிலும், அரசின் உத்தரவால் திருச்சி முகாமில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளவும், வெளிநாடு செல்ல ஏதுவாக முகாமிற்கு வெளியே நடமாடவும் விசா நடைமுறைகளை சென்னை மண்டல வெளிநாட்டவர் பதிவு அலுவலகம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்