தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் அருகே வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை நேரத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வானராங்குடியில் நிலவிய அவதி
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வானராங்குடி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இந்த சக்கர நாற்காலி வசதி முறையாகச் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் 70 வயதைக் கடந்த முதியவர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் நடக்கமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
உதவிக்கு வந்த வீரர்கள்
வெயிலின் தாக்கத்தால் தள்ளாடிய முதியவர்களுக்கு அங்கிருந்த துணை ராணுவத்தினர், மனிதாபிமான அடிப்படையில் ஓடிச் சென்று உதவினர். முதியவர்களைத் தாங்கிப் பிடித்து மெதுவாக அழைத்துச் சென்று அவர்கள் வாக்களிக்க உதவினர்.
வாக்கைச் செலுத்திய பிறகும், தகிக்கும் வெயிலில் முதியவர்கள் சிரமத்துடன் நடந்து சென்றது அங்கிருந்தோரிடையே வேதனையை ஏற்படுத்தியது.
“ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் எங்களைப் போன்ற முதியவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூடச் செய்யப்படவில்லை,” என ஆதங்கத்துடன் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இனி வரும் காலங்களிலாவது முதியவர்களின் நலன் கருதி சக்கர நாற்காலி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தேர்தல் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

