தேர்தல் செலவு: முதலிடத்தில் திமுக, கணக்கு காட்டாத தவெக

தேர்தல் செலவு: முதலிடத்தில் திமுக, கணக்கு காட்டாத தவெக

கோப்புப் படம்: மின்னம்பலம்

25 Sep 2026 - 8:06 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் இவ்வாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிகபட்சமாக ரூ.197.84 கோடி செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் செலவுக் கணக்கு விவரம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம் (தவெக) இன்னும் தனது தேர்தல் செலவுக் கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை

திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் பிரசாரத்திற்காக மொத்தம் ரூ.197.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பொதுப் பிரசாரத்திற்கு ரூ.149.90 கோடி ரூபாயும், வேட்பாளர்களுக்கான செலவாக ரூ.47.95 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவில் ரூ.319.40 கோடி கையிருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக தாக்கல் செய்துள்ள கணக்கில், மொத்தத் தேர்தல் செலவு ரூ.112.40 கோடி ரூபாயாக உள்ளது. இதில் பிரசார விளம்பரங்களுக்காக ‘பிரமான்யா ஸ்ட்ராட்டஜி கன்சல்டிங்’ நிறுவனத்திற்கு மட்டும் ரூ.103.98 கோடி வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வங்கிக் கணக்குகளில் ரூ.295.98 கோடி கையிருப்பில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாட்டில் தேர்தலுக்காக ரூ.51.56 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மாநிலத் தலைவர் அண்ணாமலை, குஷ்பு ஆகியோரின் பிரசாரத்திற்காக ரூ.84.25 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தேர்தலுக்காகச் சுமார் ரூ.22.25 கோடி செலவிட்டுள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சி பிரசாரம், விளம்பரம், பயணச் செலவுகள் உட்பட மொத்தம் ரூ.1.37 கோடி மட்டுமே செலவிட்டுள்ளதாகக் கணக்குக் காட்டியுள்ளது.

அதேவேளையில், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் செலவு அறிக்கையை இதுவரை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. செலவுக் கணக்கை அக்கட்சி விரைவில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்