சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அவ்விரு தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை விட்டு விலகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியல் லாபங்களுக்காகவும் சுய விருப்பத்திற்காகவும் குறுகிய காலத்தில் எம்எல்ஏக்கள் பதவி விலகுவதால், மக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதுபோன்ற தேர்தல் செலவுகளைப் பதவி விலகிய முன்னாள் எம்எல்ஏக்களிடமே வசூலிக்கும் வகையில் புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குறுகிய காலத்தில் பதவி விலகி மக்கள் தீர்ப்பைப் புறக்கணிப்பவர்களை, குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்ய புதிய சட்டங்களை இயற்ற ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதுவரை இவ்விரு தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் திரு சுதன் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள கரூர், விராலிமலை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், எஞ்சிய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைத் தடுக்க தொடரப்பட்ட இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

