சென்னை: ‘எஸ்ஐஆர்’ என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியைத் தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இண்டியா கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், “வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறியுள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை.
2026 சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் அற்றதாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணி. இது குளறுபடிகளை நீக்கும் தேர்தலுக்கான சீர்திருத்தமே தவிர, வேறொன்றும் அல்ல என்று திரு செம்மலை கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என இரண்டு இடங்களில் பெயர் இருப்பவர்கள், இதையெல்லாம் வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாமல் இருந்தால் தேர்தல்களில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.
வாக்காளர் பட்டியலில் இது போன்ற குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும். உண்மையான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவே தேர்தல் ஆணையம், இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணியைச் செய்து வருகிறது. அனைத்துக் கட்சியினருமே வாக்களிக்கத் தகுதியானவர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று தான் கருதுவர். ஆகவே, இதை இண்டியா கூட்டணியினர் எதிர்க்கத் தேவையில்லை.
பீகாரில் கடந்த தேர்தலில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை வைத்து இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த மாநிலத்தில் நீக்கப்பட்டவர்கள், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தவர். அவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை. அதனால்தான் அவர்கள் நீக்கப்பட்டனர்.
இது தான் பீகாரில் நடந்தது. அங்கு வாக்காளர்களை வேண்டுமென்றே நீக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் இந்திய நாட்டின் குடிமக்கள். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் திரு செம்மலை.
இந்நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு கேள்விகள் எழுப்பியுள்ளனர். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறும் வகையில் ஆணையம், ஒவ்வொரு மாவட்டத் தேர்தல் அலுவலகத்திலும் உதவி மையத்தை அமைத்துள்ளது. அந்த மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அங்கு, தேவையான விளக்கங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

